மூலவர் : ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி
உற்சவர் : திருவேங்கடநாத பெருமாள்
அம்மன்/தாயார் : நாச்சாரம்மன்
தல விருட்சம் : வில்வம்
பூஜை : ஒருகால பூஜை
புராண பெயர் : திருவேங்கடநாதர்
ஊர் : எழுமலை
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எழுமலையில் அமைந்திருக்கும் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ திருவேங்கடநாதசுவாமி திருக்கோவில். மேற்க்குதொடர்ச்சிமலைகள் சூழ இயற்கை சூழலில் எழில்மிகு ஊரில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். கலியுகாதி வருடம் 4457-ல் ஸ்ரீ ஏரசின்னம நாயக்கர் அவர்களால் அழகியநல்லூர் எழுமலைக் கிராமமும், ஸ்ரீ திருவேங்கடநாதசுவாமி திருக்கோவிலும் உற்பத்தி பண்ணப்பட்டது.
ஆலய அமைப்பு
எழுமலை கிராமத்திற்கு மேற்கே இத்திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலுக்கு முன்பு ஆதி விநாயகரும், திருக்கோவில் தெப்பக்குளமும் உள்ளது. இத்திருக்கோவில் முன்பு கல்லினால் ஆன நான்குகால் வசந்த மண்டபமும் உள்ளது. சிறிய ராஜகோபுரத்தை உடைய இக்கோவில் நுழைவு வாசல் மண்டபம் கல்லால் ஆனது. நுழைவு வாசலுக்கு வெளியையும், உள்ளேயும் எட்டு கற்தூண்கள் தாங்கிய மண்டபம் உள்ளது. நுழைவு வாசலை கடந்தால் பலிபீடமும், கொடிமரமும் உள்ளது. கொடிமரத்திற்கு அருகே கருவறையை நோக்கி ஒரு சிறிய கருட சன்னதி மண்டபம் உள்ளது.
இச்சன்னதி முன்பு கற்களால் கட்டப்பட்ட யாகம் மற்றும் திறந்தவெளி மண்டபம் உள்ளது. இக்கல்மண்டபத்தை 12 கற்தூண்கள் தாங்குகின்றன. இதனை அடுத்து கோவில் மணிமண்டபம் உள்ளது. இந்தமண்டபத்தை 6 கற்தூண்கள் தாங்குகிறன. இத்தூண்களில் கடவுள்கள், பறவைகள், மலர்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து ஆஸ்தான மண்டபத்தின் நுழைவுவாயிலில் கல்லால் செதுக்கப்பட்ட இரு துவாரபாலகர்கள் உள்ளனர். முழுக்க முழுக்க கற்களால் உருவாக்கப்பட்ட ஆஸ்தான மண்டபத்தில் நான்கு தூண்கள் தாங்குகின்றன. இத்தூண்களில் இத்திருக்கோவிலையும், எழுமலை கிராமத்தையும் உண்டுபண்ணிய எழுமலை ஆதிஜமீன்தார் ஸ்ரீ எரசின்னம்ம நாயக்கர் மன்னர் சிலை உள்ளது. இதனை அடுத்து கர்ப்பகிருகம் உள்ளது. இதனை அடுத்து உள்ளே கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதமாக திருவேங்கட பெருமாள் என அழைக்கப்படும் உற்சவர் வீற்றிருக்கிறார். திருப்பதி ஏழுமலை திருவேங்கடமுடையானின் அதே அம்சம் கொண்ட திருக்கோலத்தில் நின்ற நிலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதமாக பக்தர்களுக்கு காட்சியளிக்க எழுந்தருளியிருக்கின்ற மூலவருக்கு “திருவேங்கடநாத சுவாமி” என்று பெயர். இவர் கிழக்கு திசை நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார்.
இத்திருக்கோவிலில் அலமேலு அம்பாளுக்கென்று "நாச்சாரம்மன்" என்ற பெயரில் தனி சன்னதி உள்ளது. வடக்குதிசை நோக்கி நின்றகோலத்தில் ஆசிபுரியும் ஸ்ரீராம யோக ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. அனுமன் ஜெயந்தி அன்று துளசி மாலை, வடைமாலை அனுவித்து வேண்டுவது உடனே பலனளிக்கும்.
தல வரலாறு
கலியுகாதி வருடம் 4457-ல் ஆரண்ய வனமாக இருந்த காட்டை அழித்து குதிரைமலைக்கு அடிவாரத்தில் அழகியநல்லூர் என்ற கிராமத்தை உண்டு பண்ணி ஆட்சிசெய்து வந்தார் எழுமலை ஆதி ஜமீன்தார் எரசின்னம்ம நாயக்கர். ஒரு நாள் இரவில் ஜமீன்தார் தூங்கிக்கொண்டிருக்கும் போது பெருமாள், ஜமீன்தார் கனவில் தோன்றி நான் ஊருக்கு மேற்கே பூமிக்கடியில் இருக்கிறேன். எந்த இடத்தில் என்திருமேனியை காணுகிறாயோ அதே இடத்தில் எனக்கு ஆலயம் எழுப்பி வழிபடவும் என்று சொல்லி மறைந்தார். மறுநாள் ஜமீன்தார் சென்று தேடிப்பார்த்து பெருமாளின் திருமேனியைக் கண்டார். பெருமாளின் திருமேனி திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் திருவேங்கடமுடையானின் திருமேனி அமைப்பில் அப்படியே இருந்திருந்ததால், திருமேனி கிடைத்த இடத்திற்கு ஏழுமலை என்றும், அந்த இடத்தில் திருக்கோவில் எழுப்பி பெருமாளை எழுந்தருளல் செய்து “திருவேங்கடநாத சுவாமி” என்று உற்பத்தி செய்தார். நாளடைவில் ஏழுமலை என்பது எழுமலை ஆனது.
திருக்கோவில் நித்திய பூஜைக்கும், திருவிழாவிற்கும், திருக்கோவில் ஊழியத்திற்கும் சுமார் 400 ஏக்கர் நிலத்தை பூஜை மானிபமாகவும், ஊழிய மானிபமாகவும் திருக்கோவிலுக்கு வழங்கினார்.
இத்திருக்கோவிலில் இரண்டு நாட்கள் சித்திரை திருவிழா, புரட்டாசி சனி, மார்கழி மாதவைபவம், வைகுண்டஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் உரியடி உற்சவம் வெகுசிறப்பாக நடைபெறும்.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை வரம், நாகதோஷம், நினைத்த செயல்கள் ஈடேற, குடும்ப ஐஸ்வர்யம் பெருக வரம் அருளும் தலம்.
நேர்த்திக்கடன்
பிரார்த்தனை செய்து, நிறைவேறிய பிறகு சித்ரா பௌர்ணமியன்று முடிகாணிக்கை, நைவேத்தியம், சுவாமிக்கு ஏதேனும் கைங்கர்யம் செய்யலாம்.
திருக்கோவில் வழித்தடம்
இத்திருக்கோவிலுக்கு வருகைதந்து ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி அருள்பெற மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்தும் (16 கி.மீ) மற்றும் பேரையூரிலிருந்தும் (16 கி.மீ) அதிகமான பேருந்து வசதி உள்ளது.
Comments
Post a Comment